அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தாக்கு அமருக்கு
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
தீயவனாகிய என்னை நரகத்தில்
சேர்க்காமல்,
திருவடியில் சேர்த்து
அருள்.
தாத்தன
தத்தன தானன தானன
தாத்தன தத்தன தானன தானன
தாத்தன தத்தன தானன தானன ...... தனதான
தாக்கம
ருக்கொரு சாரையை வேறொரு
சாக்ஷிய றப்பசி யாறியை நீறிடு
சாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு
...... தவமூழ்குந்
தாற்பர்ய
மற்றுழல் பாவியை நாவலர்
போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல்
சாற்றுத மிழ்க்குரை ஞாளியை நாள்வரை
.....தடுமாறிப்
போக்கிட
மற்றவ்ரு தாவனை ஞானிகள்
போற்றுத லற்றது ரோகியை மாமருள்
பூத்தம லத்ரய பூரியை நேரிய ...... புலையேனைப்
போக்கிவி
டக்கட னோஅடி யாரொடு
போய்ப்பெறு கைக்கிலை யோகதி யானது
போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயி லாவருள்
....புரிவாயே
மூக்கறை
மட்டைம காபல காரணி
சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி
மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி
...... முழுமோடி
மூத்தவ
ரக்கனி ராவண னோடியல்
பேற்றிவி டக்கம லாலய சீதையை
மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு
...... முகிலேபோய்
மாக்கன
சித்திர கோபுர நீள்படை
வீட்டிலி ருத்திய நாளவன் வேரற
மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன்
...... மருகோனே
வாச்சிய
மத்தள பேரிகை போல்மறை
வாழ்த்தம லர்க்கழு நீர்தரு நீள்சுனை
வாய்த்ததி ருத்தணி மாமலை மேவிய ......பெருமாளே.
பதம் பிரித்தல்
தாக்கு
அமருக்கு ஒரு சாரையை, வேறு ஒரு
சாட்சி அறப் பசி ஆறியை, நீறு இடு
சாஸ்த்ர வழிக்கு அதி தூரனை, வேர் விழு ...... தவம்
மூழ்கும்
தாற்பர்யம்
அற்று உழல் பாவியை, நாவலர்
போல் பரிவு உற்று உனையே கருதாது, இகல்
சாற்று தமிழ்க் குரை ஞாளியை, நாள்வரை .....தடுமாறிப்
போக்கிடம்
அற்ற வ்ருதாவனை, ஞானிகள்
போற்றுதல் அற்ற துரோகியை, மாமருள்
பூத்த மல த்ரய பூரியை, நேரிய ......புலையேனை,
போக்கி
விடக் கடனோ? அடியாரொடு
போய்ப் பெறுகைக்கு இலையோ கதி ஆனது?
போர்ச்சுடர் வஜ்ர வைவேல் மயிலா! அருள்
....புரிவாயே.
மூக்கு
அறை மட்டை, மகா பல காரணி,
சூர்ப்பநகை, படு மூளி, உதாசனி,
மூர்க்க குலத்தி, விபீஷணர் சோதரி, ...... முழுமோடி,
மூத்த
அரக்கன் இராவணனோடு இயல்பு
ஏற்றி விட, கமலாலய சீதையை,
மோட்டன் வளைத்து ஒரு தேர் மிசையே கொடு, ......முகிலேபோய்,
மாக்
கன சித்திர கோபுர நீள் படை
வீட்டில் இருத்திய நாள், அவன் வேர்அற
மார்க்கம் முடித்த விலாளிகள் நாயகன்
...... மருகோனே!
வாச்சிய
மத்தள பேரிகை போல், மறை
வாழ்த்த, மலர்க் கழுநீர் தரு நீள்சுனை
வாய்த்த, திருத்தணி மாமலை மேவிய ......பெருமாளே.
பதவுரை
மூக்கறை மட்டை --- மூக்கு அறுக்கப்பட்டவளும், அறிவில்லாதவளும்,
மகா பல --- பெரிய வலிமை உடையவளும்,
காரணி --- இராவணாதி அவுணர்கள் வதத்திற்குக்
காரணமானவளும்,
சூர்ப்பநகை --- சூர்ப்பனகை என்ற பேரை உடையவளும்,
படுமூளி --- மூளியான கொடியவளும்,
உதாசனி -- அவமதிக்கத் தக்கவளும்,
மூர்க்க குலத்தி --- மூர்க்க குணமுடைய அசுர
குலத்திற் பிறந்தவளும்,
விபீஷணர் சோதரி --- விபீஷணருக்கு தங்கையும்,
முழுமோடி --- மடைமை நிறைந்தவளும் ஆகிய
சூர்ப்பநகை,
மூத்த அரக்கன் இராவணனோடு --- மூத்தவனும்
அரக்கனுமாகிய இராவணனிடம்,
இயல்பு ஏற்றி விட --- சீதையின் அழகின்
தன்மைகளை அவன் உள்ளத்தில் புகுத்திவிடலும்,
கமல ஆலய சீதையை --- தாமரைக் கோயிலில் வாழும்
இலக்குமியாகிய சீதாதேவியை,
மோட்டன் --- அறிவில்லாதவனாகிய அந்த இராவணன்,
வளைத்து --- மாயமாகப் போய் எடுத்து,
ஒரு தேர் மிசையே கொடு --- ஒற்றைத் தேரின்கண்
வைத்துக் கொண்டு,
முகிலே போய் --- மேகமண்டலம் வரை சென்று,
மா கன --- மிகவும் பெருமை பொருந்தி,
சித்திர --- சித்திரங்களோடு கூடிய,
கோபுரம் நீள் --- கோபுரங்கள் நீண்டுள்ள,
படைவீட்டில் இருத்திய நாள் --- சேனைகளோடு
கூடிய அசோக வனத்திலுள்ள மண்டபத்தில் சிறைப்படுத்திய போது,
அவன் வேர் அற --- அவ்விராவணனுடைய வம்சம்
வேருடன் அற்றுப் போக,
மார்க்கம் முடித்த --- அதற்குரிய வழியை
நிறைவேற்றிய,
வில்லாளிகள் நாயகன் ---
வில்வீரர்களுக்கெல்லாம் நடு நாயகமாக விளங்குகின்ற இராகவரது,
மருகோனே --- திருமருகரே!
வாத்திய மத்தள பேரிகை போல் --- மத்தளம் பேரிகை
முதலிய வாத்தியங்களைப் போல் மிகுந்த ஓசையுடன்,
மறை வாழ்த்த --- வேதியர்கள் வேதங்களால்
வாழ்த்தவும்,
கழுநீர் மலர் தரு --- செங்கழுநீர் மலரை
நாள்தோறும் தருகின்ற,
நீள் சுனை வாய்த்த --- நீண்ட செங்கழு நீர்ச்
சுனையை தன்னகத்தே வாய்க்கப்பெற்ற,
திருத்தணி மாமலை மேவிய --- திருத்தணிகை
யென்னும் பெருமை தங்கிய மலையில் எழுந்தருளியுள்ள,
பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!
தாக்கு அமருக்கு --- தாக்கிச் செய்கின்ற
போருக்கு,
ஒரு சாரையை --- ஒரு சாரைப் பாம்பு போன்றவனை,
வேறு ஒரு சாட்சி அற --- அருகில் வேறு ஒருவரை
சாட்சியாக வைத்து உண்பிக்காமல்,
பசி ஆறியை --- தனியே இருந்து புசிக்கின்றவனை,
நீறு இடு சாஸ்த்ர வழிக்கு --- திருநீற்றைத்
தரிக்கின்ற சைவாகம சாஸ்திர வழிக்கு,
அதி தூரனை --- வெகுதொலைவில் உள்ளவனை,
வேர் விழு தவ மூழ்கும் --- மரத்தைத் தாங்கும்
வேர்போல் ஆருயிரைத் தாங்கி அருள்கின்ற மெய்த் தவத்தில் முழுகும்,
தாற்பர்யம் அற்று --- நற்பயனை விடுத்து,
உழல் பாவியை --- வீணில் உழன்று திரிகின்ற
பாவியை,
நாவலர் போல் --- புலவர்களைப் போல் நடித்துக்
கொண்டு,
பரிவுற்று உனையே கருதாது --- அன்புடன்
தேவரீரையே நினையாமல்,
இகல் சாற்று --- சண்டை செய்து,
தமிழ் குரை ஞாளியை --- தமிழ் மொழிகளால் வேறு
ஒருவருடன் வாதிட்டு குரைக்கின்ற நாயினை,
நாள்வரை தடுமாறி --- இந்நாள்வரை தடுமாற்றம் அடைந்து,
போக்கிடம் அற்ற வ்ருதாவனை --- வேறு எங்கும்
புகலிடம் அற்ற வீணனை,
ஞானிகள் போற்றுதல் அற்ற துரோகியை ---
மெய்யறிவினர் காப்பாற்றாது கைவிட்ட துரோக சிந்தனையுடையவனை,
மா மருள் பூத்த --- பெரிய மயக்கம் நிறைந்த,
மல த்ரய பூரியை --- மும்மலங்களுடன் கூடிய
கீழ்மகனை,
நேரிய புலையேனை --- புலையனுக்குச் சமமானவனை,
போக்கி விட கடனோ --- இத்தகைய பாவியாகிய
அடியேனை தேவரீர் தள்ளிவிடக் கடவதோ?
கதி நரகோ --- அடியேனுக்குப் புகலிடம் நரகம் தானோ?
கதி ஆனது போய் பெறுகைக்கு இலையோ --- மோக்ஷ
உலகத்தில் போய் பேரின்பம் பெறுமாறு இல்லையோ?
போர் சுடர் --- போர் செய்வதும் ஒளிவிடுவதும்,
வஜ்ர --- வஜ்ஜிரம் போன்றதும்,
வை --- கூர்மை பொருந்தியதுமாகிய,
வேல் மயிலா --- வேலையும் மயிலையும் உடையவரே!
அருள் புரிவாயே --- திருவருள் புரிவீர்.
பொழிப்புரை
மூக்கு அறுக்கப்பட்டவளும், அறிவிலியும், பெரிய வலிமை உடையவளும், இராவணாதிகள் நாசத்திற்குக் காரணமானவளும், கொடிய மூளியும், அவமதிக்கத் தக்கவளும், மூர்க்கக்குலத்தியும், விபீஷணருடைய தங்கையும், முழு மடைமையை யுடையவளுமாகிய சூர்ப்பநகை, தனது மூத்தவனும் அரக்கனுமாகிய
இராவணனிடம் சீதாதேவியின் அழகின் தன்மையைக் கூறி அவன் மனதில் புகச் செய்தலும், தாமரைக் கோயிலில் வாழும் இலக்குமியாகிய
சீதாபிராட்டியாரை மூடனாகிய இராவணன் வஞ்சனையால் எடுத்து தேர்மிசை வைத்துக்கொண்டு
போய் மேக மண்டலம்வரை அளாவியதும் பெருமை மிக்கதும் சித்திரங்களுடன் கூடியதுமாகிய
கோபுரங்களால் அழகு செய்கின்ற காவலோடு கூடிய அசோகவனத்தில் சிறைப்படுத்தியபோது, அவனுடைய குலத்தின் வேர் அற்றுப்
போகுமாறு செய்தவரும் வில் வீரர்களுக்குள் நடுநாயகமாக விளங்குகின்றவருமாகிய
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் மருகரே!
மத்தளம் பேரிகை முதலிய வாத்தியங்களைப்
போல் வேதவொலி முழங்குவதும், நாள்தோறும் பூக்கின்ற
செங்கழுநீர் சுனையைத் தன்னகத்தே உடையதுமாகிய பெருமை தங்கிய திருத்தணி மலையின்மீது
எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!
தாக்குதலோடு கூடிய போருக்கு சாரைப்
பாம்புபோல் ஓடி ஒளிபவனும், அருகில் ஒருவரை
சாட்சியாக வைத்து உண்பிக்காமல் தனியே பசியாறுபவனும், திருநீறிடுகின்ற சைவ சமய சாத்திரவழிக்கு
நீண்ட தூரத்தில் இருப்பவனும், ஆவியைத் தாங்குகின்ற
தவநெறியில் முழுகும் நற்பயனின்றி வீணில் உழல்கின்ற பாவியும், புலவர்களைப்போல் நடித்துக்கொண்டு
அன்புடன் தேவரீரை உளங்கனிந்து நினையாமல் சண்டையிட்டு தமிழைக் குரைக்கின்ற நாய்
போன்றவனும், இந்நாள்வரை தடுமாறி
போக்கிடம் வேறில்லாத வீணனும், மெய்ஞ்ஞானிகளால்
காக்கப்படாத துரோகியும், பெரிய மயக்கம்
நிறைந்த கீழ்மகனும், மும்மலங்களால்
மூடப்பட்டவனும் புலையனுக்கு நிகரானவரும் ஆகிய அடியேனை கருணாநிதியாகிய தேவரீர்
தள்ளிவிடுவது தகுதியோ? தேவரீர்
தள்ளிவிட்டால் அடியேனுக்கு புகலிடம் நரகந்தானோ? முத்தியுலகத்திற் புகுந்து பெறுவதற்கு
இல்லையோ? போர் புரிவதில்
வல்லதும் ஒளி வீசுவதும் வஜ்ரம் போன்றதும் கூரியதுமாகிய வேலாயுதத்தையும் மயில்
வாகனத்தையும் உடையவரே! திருவருள் புரிவீர்.
விரிவுரை
தாக்கு
அமருக்கு ஒரு சாரையை ---
சாரை-சாரைப்பாம்பு; சாரைப் பாம்பு நீளமாகவும் பார்க்கப்
பயங்கரமாகவுமிருக்கும். ஆனால் ஆளைக் கண்டால் ஓடி ஒளியும். நல்லபாம்பு படமெடுத்து
ஆளை எதிர்க்கும். பயந்து ஓடும் இயல்பு உடையது சாரைப் பாம்பு. அதுபோல், சமய நிந்தை தெய்வ நிந்தை செய்யும் இடங்களில்
உயிரைத் துரும்பாக எண்ணி எதிர்க்காமல் ஓடியொளியும் பேடித் தன்மையுடையவன் என்பது
கருத்து.
சாட்சியறப்
பசியாறியை ---
“பகடு நடந்த கூழ்
பல்லாரோடு உண்க” என்றபடி உண்ணும் போது பலரை வைத்துக்கொண்டு சாப்பிட வேண்டும்.
இயலவில்லையேல் ஒருவரையாவது சாட்சி வைத்து அவரோடு கலந்து உண்ண வேண்டும். அப்படிக்கு
இன்றி கதவடைத்து விட்டுத் தனியே இருந்து சாப்பிடும் மாக்களை கண்டிக்கின்றனர்.
திருச்செந்தூரில்
முருகக் கடவுள் சந்நிதியில் சாட்சி போஜனம் செய்விப்பது இன்றும் கண்கூடு.
நீறிடு
சாஸ்த்ர வழி ---
சைவசமய
நெறி. இதனை உணர்த்தும் சாத்திரங்கள் பதினான்கு. அந்நெறியாவன:- பதி பசு பாசம்
என்னும் முப்பொருளுண்மையை உணர்தலும், அவைகளின்
இலக்கணத்தை உணர்தலும், ஆன்மா கட்டினின்றும்
நீங்கி பதியுடன் இரண்டறக் கலத்தலும் ஆம். இவைகளின் விரிவை மேற் கூறிய போதம், சிவஞான சித்தியார் முதலிய முதனூல்
வழிநூல்களைக் கொண்டு ஆராய்ந்து தெளிக.
நாவலர்போல்........ஞாளியை ---
கற்றதனாலாய
பயன் கடவுளைக் கருதுவதே. கற்றதுங் கேட்டதுங் கொண்டு கற்பனை கடந்த காரணனைக் கசிந்து
உருகி நினைந்து உய்தல் வேண்டும். அவ்வாறு இறைவனை நினைந்து நெஞ்சம் நெகிழாது சிறிது
படித்த மாத்திரத்தே தலை கிறுகிறுத்து, தற்செருக்குற்று
தன்னைப் போல் படித்தவரிடம் தர்க்கித்து மண்டையை உடைத்து வறிதே கெடும் வம்பரை
இடித்துரைக்கின்றனர்.
கற்றதும்
கேட்டதும் தானே ஏதுக்காக?
கடபடம்
என்று உருட்டுதற்கோ? கல்லால் எம்மான்
குற்றம்அறக்
கைகாட்டும் கருத்தைக் கண்டு
குணங்குறி
அற்று இன்பநிலைகூட அன்றோ. --- தாயுமானார்.
சூர்ப்பநகை ---
சூர்ப்பம்-முறம்
(சுளுகு) முறம் போன்ற நகத்தையுடையவள் ஆதலால் சூர்ப்பணகா எனப்பட்டனள். அது தமிழில்
ஐகார ஈறுபெற்று சூர்ப்பணகை என்று வந்து வழக்காற்றில் சூர்ப்பநகை என வழங்குகின்றது.
விபீஷணர்
சோதரி ---
இராவண
சோதரி என்றாலும் சந்தங்கெடாது. தீயவளைத் தீயவனுடைய சோதரி என்றால்தான் அவளுடைய தீமை
நன்கு வலியுறும். தூயவனாகிய விபீடணனது சோதரி என்று நம் சுவாமிகள் கூறியதன் உண்மை
யாது? காரணமின்றி அங்ஙனம்
கூறார். அக்காரணமும் சிறந்த காரணமாக இருக்க வேண்டும். அதன் வரலாறு வருமாறு
சங்க சூடணன் வரலாறு
சத்தியவிரதம்
என்ற ஒரு பேரரசனுக்கு சங்கசூடணன் என்ற அருமந்த மைந்தன் இருந்தான். அவன் எல்லா
நற்குணங்களும் அமையப் பெற்றவன். ஆனந்தகுரு என்பவரிடம் கல்வி பயின்று வந்தான்.
ஆனந்த குருவுக்கு சுமுகி என்ற ஒரு பெண் இருந்தாள். அவள் சங்கசூடணனிடம் காதல்
கொண்டிருந்தாள். அது சங்கசூடணனுக்குத் தெரியாது; அவனுக்குக் கல்வியிலேயே தான் கருத்து
இருந்தது. தூய உள்ளமுடைய சங்கசூடணன் ஒரு நாள் முன்னிரவில் தனக்கேற்பட்ட ஐயத்தை
நீக்கிக்கொள்ளும் பொருட்டுக் குருவின் இருக்கை புகுந்தான். குரு அங்கில்லை; சுமுகி தனித்திருந்தாள். தன் கருத்தை
அவனிடம் வெளிப்படுத்தினாள். சங்கசூடணன் “நீ எனக்குத் தங்கை; குருவின் மகளாகிய உன்னை நான் மனத்தாலும்
தீண்டேன் இப்பிறப்பில் மட்டுமன்று;
இனிவரும்
பிறப்பிலும் நீ எனக்குத் தங்கையே” என்று மறுத்துவிட்டுப் போயினான். சுமுகி அவன்
தன்னைக் கற்பழித்தானென்று பழி மூட்டினாள். அதைக் குருவாகிய அவள் பிதா நம்பி
அரசனிடம் கூறினார். அரசனும் சீறி மகனைக் கானகத்தில் கற்பாறைமீது கிடத்தி கைகாலைத்
துணிப்பித்தான். சங்கசூடணன் தரும தேவதையை நினைந்து புலம்பினான். அவனுடைய அலக்கணைக்
கண்டு பூமியைப் பிளந்துகொண்டு ஆதிசேடன் வெளிப்பட்டு, “நின்னை இப்படிப் பழிமூட்டி இடர் செய்த
சுமுகியை மறுபிறப்பில் நான் இடர் செய்வேன்” என்று ஆறுதல் கூறி மறைந்தான். அந்த
உத்தம குணம் நிறைந்த சங்கசூடணன் விபீஷணனாகப் பிறந்தான் அந்த சுமுகி
சூர்ப்பநகையாகப் பிறந்தாள். ஆதிசேடன் இலக்குவனாகப் பிறந்து சூர்ப்பநகையை
உறுப்பறுத்து இடர்ப்படுத்தினான். இந்த உயர்ந்த உள்ளீட்டைப் புலப்படுத்த “விபீஷணர்
சோதரி” என்று கூறியருளினார்.
இராவணனோடு
இயல்பு ஏற்றிவிட ---
சூர்ப்பநகை
மூக்கறுக்கப்பட்டு இராவணனிடம் சென்று சீதையின் இயல்புகளைக் கூறி அவனை அடியோடு
கெடுத்தனள். அதனால் அவளே இராவணனுடைய அழிவிற்குக் காரணம்.
நீலமா
மணிநிற நிருதர் வேந்தனை
மூலநாசம்
பெற முடிக்கு மொய்ம்பினாள்
மேலை
ளுயிரொடும் பிறந்து தான்விளை
காலமோர்ந்
துடனுறை கடிய நோயனாள். --- கம்பர்.
இவள்
இராவணனிடம் சீதையின் இயல்பு கூறுமாறு காண்க.
காமர
முரலும் பாடல் கள்ளெனக் கனிந்த வின்சொல்
தேமலர்
நிரந்த கூந்தற் றேவர்க்கு மணங்கா மென்னத்
தாமரை
யிருந்த தையல் சேடியாந் தரமு மல்லள்
யாமுரை
வழங்கு மென்ப தேழமைப் பால தன்றோ.
தோளையோ சொல்லு கேனோ சுடர்முகத் துலவு கின்ற
வாளையே
சொல்லு கேனோ வல்லவை வழுத்து கேனோ
மீளவுந்
திகைப்ப தல்லாற் றனித்தினி விளம்ப லாற்றேன்
நாளையே
காண்டி யன்றே நானுனக் குரைப்ப தென்னோ. --- கம்பர்.
மோட்டன்
---
ஆயிரம்
வேதங்களைக் கற்ற இராவணனைச் சுவாமிகள் “மோட்டன்” என்றனர். காரணம் கற்றதன் வண்ணம்
நிற்குந்திறனின்றி பிறன் தாரம் நச்சிய பேயன் ஆதலின்.
வில்லாளிகள்
நாயகன் ---
கரவேகமுஞ்
சரவேகமும் மிக்குடையோன் இராமனே யாதலின் “வில்லாளிகள் நாயகன்” என்றனர்.
“உலையுருவக்
கனலுமிழ்கட் டாடகைதள் னுரமுருவி
மலயருவி மரமுருவி மண்ணுருவிற் றொருவாளி”
என்பதனால்
சரவேகம்,
“தடுத்திமை யாம
லிருந்தவர் தாளின்
மருத்தது
நாணுதி வைத்தது நோக்கார்
கடுப்பினில்
யாரு மறந்திலர் கையால்
எடுத்தது
கண்டனர் இற்றது கேட்டார்”
என்பதனால்
கரவேகமுங் காண்க.
கருத்துரை
இராகவன்
மருகரே! திருத்தணிகைத் தேவே! தீமையே மிக்குடைய சிறியேனை நரகம் புக வொட்டாது பரகதி
சேர்ப்பித்து ஆட்கொள்வீர்.
No comments:
Post a Comment