திருத்தணிகை - 0283. சினத் திலத்தினை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சினத் திலத்தினை (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
இனியும் அடியேன் பிறவி எடுத்து உழலாமல் அருள்.


தனத்த தத்தன தனதன தனதன
     தனத்த தத்தன தனதன தனதன
          தனத்த தத்தன தனதன தனதன ...... தனதான


சினத்தி லத்தினை சிறுமண லளவுடல்
     செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்
          செனித்த தெத்தனை திரள்கய லெனபல ......வதுபோதா

செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை
     செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு
      செடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ......தளவேதோ

மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி
     கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்
      வதைத்த தெத்தனை யளவிலை விதிகர ......மொழியாமல்

வகுத்த தெத்தனை மசகனை முருடனை
     மடைக்கு லத்தனை மதியழி விரகனை
          மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் ...... புரிவாயே

தனத்த னத்தன தனதன தனதன
     திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
          தகுத்த குத்தகு தகுதகு தகுதகு ...... தகுதீதோ

தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி
     தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு
          தமித்த மத்தள தமருக விருதொலி ...... கடல்போலச்

சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய
     திமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை
          தெறித்தி டக்கழு நரிதின நிணமிசை ......பொரும்வேலா

செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ
     முநிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி
          திருத்த ணிப்பதி மருவிய குறமகள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சினத் திலத் தினை சிறு மணல் அளவு, டல்
     செறித்தது எத்தனை, சிலை கடலினில் உயிர்
          செனித்தது எத்தனை, திரள்கயல் என பல...... அதுபோதா.

செமித்தது எத்தனை, மலைசுனை உலகிடை
     செழித்தது எத்தனை, சிறுதன மயல்கொடு
     செடத்தில் எத்தனை நமன்உயிர் பறிகொள்வது......அளவு ஏதோ?

மனத்தில் எத்தனை நினை கவடுகள், குடி
     கெடுத்தது எத்தனை, மிருகம் அது என உயிர்
    வதைத்தது எத்தனை, அளவிலை, விதிகரம் .....ஒழியாமல்

வகுத்தது எத்தனை, மசகனை, முருடனை,
     மடைக் குலத்தனை, மதிஅழி விரகனை,
          மலர்ப் பதத்தினில் உருகவும் இனிஅருள் .....புரிவாயே.

தனத்த னத்தன தனதன தனதன
     திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
          தகுத்த குத்தகு தகுதகு தகுதகு ...... தகுதீதோ

தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி
     தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு
          தமித்த மத்தள தமருக விருது ஒலி ...... கடல்போலச்

சினத்து அமர்க்கள செரு திகழ் குருதியது
     இமிழ்த்திட, கரி அசுரர்கள் பரி சிலை
          தெறித்திட, கழு நரி தின நிணமிசை ......பொரும்வேலா!

செழிக்கும் முத்தம சிவ சரணர்கள், தவ
     முநிக் கணத்தவர் மது மலர் கொடுபணி,
          திருத்தணிப் பதி மருவிய குறமகள் ...... பெருமாளே.


பதவுரை


         தனத்த னத்தன தனதன தனதன திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி தகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதீதோ தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு தமித்த --- தனத்தன.............. தமித்த என்ற தாள ஒலிக் குறிப்புடன்,

     மத்தள தமருக விருது ஒலி கடல் போல --- மத்தளமும்,  உடுக்கையும், வெற்றிச் சின்னங்களும் கடல்போல் முழங்க,

     சினந்து அமர் களம் --- கோபமிக்க போர்க்களத்தில்,

     செரு திகழ் --- போர்மிகுதியாக (அதனால்),

     குருதி அது இமிழ்த்திட --- உதிரம் பெருகித் தோய்ந்திடவும்,

     கரி --- யானைப் படைகளும்,

     அசுரர்கள் --- இராக்கதர்களும்,

     பரி --- குதிரைப் படைகளும்,

     சிலை --- வில் முதலிய ஆயுதங்களும்,

     தெறித்திட --- பிளவுபட்டு அழியவும்,

     நிண மிசை கழு நரி தி(ன்)ன --- மாமிச உணவை கழுகளும் நரிகளும் தின்று பசியாறவும்,

     பொரும்வேலா --- போர்செய்த வேற்படையை உடையவரே!

         செழிக்கும் உத்தம --- திருவருளால் தழைத்துள்ளவர்களும் உத்தம குணங்களுடையவர்களுமாகிய,

     சிவசரணர்கள் --- சிவனடியார்களும்,

     தவ முநி கணத்தவர் --- தவத்தின் மிக்க இருடியர் குழாங்களும்,

     மதுமலர் கொடுபணி --- தேன் துளிக்கின்ற நறுமலர்கொண்டு வழிபாடு செய்கின்ற,

     திருத்தணி பதி மருவிய --- திருத்தணி என்னுந் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள,

     குறமகள் பெருமாளே --- வள்ளிநாயகியாருக்குத் தலைவரே!

         சின தில தினை சிறுமணல் அளவு --- சிறிய எள்ளளவும் தினையளவும் சிறுமணலளவும் ஆகிய,

     உடல் செறித்தது எத்தனை --- உடம்பினை எடுத்து உழன்ற பிறப்பு எத்தனை?

     அளவு இல்லை --- எண்ணிலாதன,

     சிலை --- மலைகளிலும்,

     கடலினில் --- சமுத்திரங்களிலும்,

     உயிர் செனித்து எத்தனை --- உயிரானது சென்று பிறந்த பிறப்பு எத்தனை? (அளவிலை).

     திரள் கயல் என பல --- திரண்டுள்ள கெண்டை மீனைப்போல் இங்குமங்குமாகப் பிறந்த பிறப்புக்கள் பல (அளவிலை).

     அது போதா --- அதுவும் போதாமால்,

     செமித்து எத்தனை --- இயமன் ஒரு புறத்து சேமித்து வைத்த பிறப்பு எத்தனை? (அளவிலை).

     சிறு தன மயல்கொடு --- சின்னத்தனமான செல்வத்தைக் கண்டு மயங்கி,

     செடத்தில் எத்தனை --- ஜடவஸ்து போல் அறிவற்றுக் கிடந்த பிறப்பு எத்தனை? (அளவிலை).

     உயிர் நமன் பறிகொள்வது அளவு ஏதோ --- உயிரைக் கூற்றுவன் பறித்துக் கொண்டு போனதற்கும் ஒரு அளவு உண்டோ? (இல்லை).

     மனத்திலு எத்தனை நினை --- மனத்தில் தோன்றும் எண்ணங்கள் எத்தனை? (அளவிலை).

     கவடுகள் எத்தனை --- வஞ்சகம் எத்தனை? (அளவிலை).

     குடி கெடுத்தது எத்தனை --- பிறர் குடிகளைக் கெடுத்தது எத்தனை? (அளவிலை).

     மிருகம் அது என உயிர் வதைத்த எத்தனை --- மிருகங்களைப்போல் உயிர்களைக் கொன்றது எத்தனை? (அளவிலை).

     விதிகரம் ஒழியாமல் --- பிரமதேவன் கை ஒழியாமல்,

     வகுத்தது எத்தனை --- விதிவிலக்கு எழுதியது எத்தனை? (அளவிலை).

     மசகனை --- கொசுவுக்குச் சமானமானவனை,

     முருடனை --- பிடிவாதமுடையவனை,

     மடைக்குலத்தனை --- அறிவற்ற குலத்தில் பிறந்தவனை,

     மதி அழி விரகனை --- அறிவு அழிந்த வஞ்சகனை,

     மலர் பதத்தினில் --- தேவரீருடைய திருவடிக் கமலத்தில்,

     உருகவும் --- உள்ளம் உருகுமாறு,

     இனி அருள் புரிவாயே --- இனியாவது திருவருள் புரிவீர்.


பொழிப்புரை


         தனத்தனத்தன......திமித்த என்ற பலப்பல சந்த பேதங்களுடன் மத்தளமும் பேரிகையும் உடுக்கையும் கடல்போல் முழங்க சினத்துடன் கூடிய போர்க்களத்தில் உதிரம் பெருகித் தோயவும் இராக்கதர்களும் யானை குதிரை முதலியவைகளும் வில் முதலிய ஆயுதங்களும் பிளவு பட்டொழியவும் தசை உணவை நரிகளும் உண்டு மகிழவும் போர் புரிந்த வேலாயுதக் கடவுளே!

         அருட்செல்வத்தால் தழைக்கின்ற உத்தம சிவனடியார்களும், தவமே தனமாகவுடைய முனிபுங்கவர்களும் தேன் துளிர்க்கின்ற மலர்களைக்கொண்டு வழிபாடு செய்ய திருத்தணி மலைமீது எழுந்தருளியுள்ள வள்ளி மணவாளரே!

         சிறிய மணலளவும் தினையளவும் நொய் மணலளவும் உள்ள உடம்பினை எடுத்து உழன்று பிறப்பு எண்ணில்லாதன; திரண்டுள்ள கயல்மீனைப் போல் புரண்டு இங்கும் அங்குமாக எடுத்த பிறவிகள் எண்ணில்லாதன; அதுவும் போதாமல் கூற்றுவனால் ஒரு புறத்தே சேமித்து வைத்த பிறப்புக்களும் எண்ணில்லாதன; மலைகளிலுள்ள சுனைகளிலும் வேறுபல உலகங்களிலும் செல்வத்தால் மயங்கி ஜடம் போற் கிடந்த பிறப்புக்கள் எண்ணில்லாதன; இயமனால் இழுக்கப் பட்டனவும் எண்ணில்லாதன;

(இத்துணை கோடி பிறவிகள் வந்து கொண்டே இருப்பதற்குக் காரணம்)

--- மனத்தில் எண்ணுகின்ற எண்ணங்கள் எண்ணில்லாதன;
--- வஞ்சங்களும் எண்ணில்லாதன;
--- பிறர் குடிகளைக் கெடுத்தனவும் எண்ணில்லாதன;
---  விலங்குகளைப் போல் மன்னுயிரைக் கொன்றதும் தின்றதும் எண்ணில்லாதன;
--- பிரமதேவன் கையொழியாமல் விதி விலக்குகளை எழுதியதும் எண்ணில்லாதன;

ஆதலால், கொசுவுக்கு நிகரானவனும் பிடிவாதம் உடையவனும், அறிவற்ற குலத்தினனும், அறிவழிந்த வஞ்சகனுமாகிய அடியேன் தேவரீருடைய திருவடிக் கமலத்தை நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுமாறு இனிமேலாவது திருவருள் புரிவீர்.


விரிவுரை

 
சினத்திலத்தினை ---

சின-சின்ன; னகரமெய் மறைதல் விகாரம். எள், தினை நொய்மணல் அளவுள்ள சிறிய உடம்புடன் கூடிய பிறப்புக்களை எடுத்தது எத்தனையோ? மேலும் கருவில் எள்ளளவு கூடி யழிந்ததும், தினையளவுகூடி யழிந்ததும், சிறுமணலளவு கூடி யழிந்தது எத்தனையோ-என்றும் பொருள் கொள்ளலாம்.

செமித்தது எத்தனை ---

சேமித்தல் என்பது செமித்தல் என்று குறுகல் விகாரம் பெற்றது. மிகுந்த பாவஞ் செய்த ஆன்மாக்களை இருட்புறத்துலகில் கற்பம் வரை இயமன் சேமித்து வைப்பான்.

செழித்தது எத்தனை ---

மனிதசஞ்சாரமற்ற மலைச்சுனைகளில் மீன் முதலிய பிறவிகளாகப் பிறந்து செழிப்புற்றது எத்தனையோ பிறவிகள்.


மனத்தில் எத்தனை நினை ---

இவ்வாறு பலகோடி கற்பங்களாக பலகோடி இடங்களில் எல்லாவகைப் பிறவிகளையும் எடுத்து எடுத்துக் கறங்கெனச் சுற்றி ஆன்மா இடைவிடாது அலைவதற்குக் காரணம் மனதில் உண்டாகும் பலகோடி எண்ணங்களேயாம். ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒவ்வொரு பிறப்புண்டு. குபேரன் சிவபெருமானுடன் தென்னாட்டுத் திருத்தலங்களைத் தரிசித்து வருங்கால் காவிரிப்பூம் பட்டினத்தைக் கண்டு சிலநாள் தங்குதல் வேண்டும் என்று எண்ணியதால் பட்டினத்தாராகப் பிறந்தனன் என்பது சரித்திரம். மனத்தில் கவடும், வாக்கில் குடி கெடுப்பதும், காயத்தால் கொலை செய்வதுமாக திரிகாரணங்களாலும் தீமையே செய்கின்றமையால், பிரமதேவன் கரமொழியால் விதிவிலக்குகளை எழுதிக்கொண்டே இருக்கின்றனன். ஆதலால், பிறவாமையைப் பெற விரும்புவோர் மனத்திலெழும் நினைவுகளை அறவே களையவேண்டும்.


மலர்ப்பதத்தினில் உருகவும் இனி அருள் புரிவாயே ---

உருகிய தங்கத்தில் இரத்தினமணி பதியும்; இளகிய சேற்றில் தாமரை மலரும்; கல்லின் மேல் தாமரை மலராது; அது போல் கருங்கல் போன்றகெட்டியான மனதில் இறைவன் திருவடித் தாமரை மலராது. கல்மனதில் இறைவன் பாதமணி பதியாது.

       திணியானமனோ சிலைமீ துனதாள்
    அணிஆர் அரவிந்தம் அரும்புமதோ”        --- கந்தரநுபூதி.

உருகிய உள்ளத்தில் இறைவன் திருவடிப் போது மலரும். அருள்பெற்ற ஆன்றோர்கள் அனைவரும் உள்ளம் உருகுதல் ஒன்றையே பெரிதும் பாராட்டுகின்றனர்.

       உருகுமடியவ ரிருவினையிருள் பொரும்
          உதயதினகர”                     --- திருப்புகழ்.

      விரகறநோக்கியும் உருகியும் வாழ்த்தியும் --- திருப்புகழ்.

கல்லேனும் ஐய,ரு காலத்தில் உருகும்,ன்
            கல்நெஞ்சம் உருகவிலையே?
     கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன்
            கற்பிக்க ஒருகடவுளோ?
வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும்பெரு
            வழக்குக்கு இழுக்கும்உண்டோ?
     வானமாய் நின்றுஇன்ப மழையாய் இறங்கிஎனை
             வாழ்விப்பது உன்பரம்காண்;
பொல்லாத சேய்எனில் தாய்தள்ளல் நீதமோ?
             புகலிடம் பிறிதும்உண்டோ?
     பொய்வார்த்தை சொல்லிலோ திருவருட்கு அயலுமாய்ப்
             புன்மையேன் ஆவன் அந்தோ;
சொல்லால் முழக்கிலோ சுகம்இல்லை, மௌனியாய்ச்
             சும்மா இருக்கஅருளாய்,
சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
             சோதியே சுகவாரியே.           --- தாயுமானார்.

தழலது கண்ட மெழுகது போலத்
தொழுதுஉளம்உருகி அழுதுஉடல் கம்பித்து
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்”    --- திருவாசகம்.

கொடியேனாகிய அடியேன் இனிப்பிறவா நெறி பெற இனியேனும் திருவடியில் நெகிழ்ந்த நெஞ்சத்தை நல்கி யாட்கொள்வீர்” என்று சுவாமிகள் முறையிடுகின்றனர்.


கருத்துரை


அசுரகுல காலரே! தணிகாசலரே! பல்கோடி பிறவி எடுத்த அடியேன் இனிப் பிறவாவகை யருள்புரிவீர்.


No comments:

50. இறைவன் அடியாரிடத்தில் விளக்கம் பெறுவான்

“இந்து, இரவி நீள்கிரணம் எங்கும் நிறைந்தாலும், இந்து இரவி காந்தத்து இலங்குமே; - இந்து இரவி நேத்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும், நித்தன்அருள் ந...